யாழில் தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு விலங்கு – தாக்குதலாளிகளை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ்.


Categories :

யாழ்ப்பாணத்தில் தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த போது தாக்குதலுக்கு இலக்காகி சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு பொலிஸார் வைத்தியசாலையில் கைவிலங்கிட்டுள்ளனர்.

தமிழ் மக்கள் கூட்டணியின் ஆதரவாளர்கள் மான் சின்னத்திற்கு ஆதரவு கோரி நேற்றைய தினம் சனிக்கிழமை நீர்வேலி கரந்தன் பகுதியில் பிரச்சார பணியில் ஈடுபட்டிருந்த வேளை ,ABT 1763 எனும் இலக்கமுடைய பச்சை நிற முச்சக்கர வண்டியில் நால்வர் கொண்ட வன்முறை கும்பல் அவர்களுடன் முரண்பட்டுள்ளனர்.

பின்னர் முச்சக்கர வண்டியில் வந்த கும்பல் அங்கிருந்து சென்று சுமார் 30 பேருடன் வந்து பிரச்சார பணிகளில் ஈடுபட்டிருந்த ஆண்கள் , பெண்கள் என இருபாலர் மீது மிக மோசமான தாக்குதலை மேற்கொண்டனர்

தாக்குதலில் ஒரு பெண் உள்ளிட்ட மூவர் படுகாயமடைந்த நிலையில் யாழ் . போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் தமிழ் மக்கள் கூட்டணியினர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய சென்ற போது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி முறைப்பாட்டினை ஏற்க பின்னடித்துள்ளார்.

அது தொடர்பில் மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகருக்கு தொலைபேசி ஊடாக தமிழ் மக்கள் கூட்டணியினர் அறிவித்த போது , பொறுப்பதிகாரி தான் முறைப்பாட்டை ஏற்றுக்கொண்டதாக பொய்யுரைத்துள்ளார். பின்னர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அறிவுத்தலின் பிரகாரம் முறைப்பாட்டினை ஏற்றுக்கொண்டனர்.

இந்நிலையில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் தாக்குதலுக்கு இலக்கான நபர்களுக்கு பொலிஸார் கைவிலங்கிட்டுள்ளனர். அது தொடர்பில் பொலிசாரிடம் தமிழ் மக்கள் கூட்டணியினர் கேட்ட போது, தமக்கு மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவுக்கு அமையவே கைவிலங்கிட்டுள்ளனர் என தெரிவித்துள்ளனர்.

தாக்குதல் சம்பவம் நடைபெற்று 24 மணி நேரம் கடந்துள்ள நிலையிலும் தாக்குதலாளிகள் எவரையும் கைது செய்யாத பொலிஸார் , தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நபர்களுக்கு கைவிலங்கிட்டுள்ளமை அச்சுறுத்தும் செயற்பாடே என தமிழ் மக்கள் கூட்டணியினர் தெரிவித்துள்ளனர்.

கோப்பாய் பொலிஸ் பொறுப்பதிகாரி நேற்றைய தினம் முறைப்பாட்டை ஏற்காது பின்னடித்தமை , இன்றைய தினம் தாக்குதலுக்கு இலக்காகி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளுக்கு கைவிலங்கிட்டுள்ளமை , 24 மணித்தியாலங்கள் கடந்தும் தாக்குதலாளிகளை கைது செய்யாமை போன்ற செயற்பாடுகள் தாக்குதல் சம்பவத்திற்கு பின்னால் பெரும் அரசியல் தலையீடு இருக்கலாம் என தமிழ் மக்கள் கூட்டணியினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

The post யாழில் தாக்குதலுக்கு இலக்கானவர்களுக்கு விலங்கு – தாக்குதலாளிகளை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸ். appeared first on Ra Tamil.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *