பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
நிலவும் சீரற்ற வானிலை காரணமாக பல பிரதேசங்களில் வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, தெதுரு ஓயா, மஹா ஓயா, அத்தனகலு ஓயா, களனி கங்கை, பெந்தர கங்கை, கிங் கங்கை, நில்வலா கங்கை, கிரம ஓயா, ஊரு பொக்கு ஓயா, கலா ஓயா, மஹாவலி கங்கை மற்றும் மல்வத்து ஓயா குளங்களைச் சூழவுள்ள தாழ்வான பகுதிகளுக்கு வௌ்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் நிலவுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பெய்து வரும் கனமழை அடுத்த சில நாட்களுக்கு தொடர்ந்து பெய்யக்கூடும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதேவேளை, ரஜரட்ட பிரதேசத்தில் பெய்து வரும் கடும் மழையினால் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் 31 அடியாக உயர்ந்துள்ளது.
இதனால் ராஜாங்கனை நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு 2,100 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
அங்கமுவ நீர்த்தேக்கத்தின் இரண்டு வான் கதவுகளும் திறக்கப்பட்டுள்ளதாகவும், இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் இது தொடர்பில் அவதானமாக இருக்குமாறு நீர்த்தேக்கத்திற்கு பொறுப்பான பொறியியலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக அநுராதபுரம் 38 ஆம் தூண் மஹபுலங்குளம் பகுதியில் சுமார் 300 ஏக்கர் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இதேவேளை, கடந்த சில தினங்களாக எல்ல பிரதேசத்தில் பெய்த கடும் மழையுடன் கரந்தகொல்ல மலித்தகொல்ல பிரதேசத்தில் மண்சரிவு நிலைமை மேலும் விருத்தியடைந்து வருகின்றது.
பல சந்தர்ப்பங்களில் மண்சரிவு மற்றும் பாறைகள் சரிந்து விழுந்த எல்ல வெல்லவாய வீதி நேற்றிரவு (17ஆம் திகதி) வாகன போக்குவரத்துக்காக மூடப்பட்டது.
குறித்த வீதி இன்று (18) காலை 06 மணியளவில் மீண்டும் திறக்கப்பட்டது.
The post பல பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை appeared first on Ra Tamil.